பிறப்பு:
இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் வட்டத்தில், வேடசந்தூருக்கு வடக்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கும் கூவக்காபட்டி என்னும் குக்கிராமத்தில், முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் என்பாருக்குப் பன்னிரண்டாவது பிள்ளையாக, 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் (அனேகமாக), ஒரு புதன்கிழமை மாலை ஆறு மணிக்குப் பிறந்தார்.
அவருடைய கிராமத்தில் அதிகமாகப் போனால் ஐம்பது வீடுகள் இருக்கும். கிணற்றுப் பாசனம் கொண்ட நன்செய் நிலம் கொஞ்சமும் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியும் கொண்ட கிராமம். சுற்றிலும் எட்டுப் பட்டிக் கிராமங்கள் கூவக்காபட்டி ஜமீனுக்கு உட்பட்டது. அத்தனை கிராமத்து மக்களும் கூவக்காபட்டி ஜமீன்தாருக்குக் கட்டுப்பட்டவர்கள். அந்த ஊர் ஜமீன் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு என்று சொல்லக் கேள்வி. அவரது தந்தையார் ஜமீன்தாரின் நெருங்கிய நண்பர்.
அவர்களது குடும்பம் ’படித்த’ குடும்பம். அவரது பாட்டனார் திரு.சிவலிங்கம் இதிகாச புராணங்களைக் கரைத்துக் குடித்தவர். கவிதை இயற்றுவார். இரவு நேரங்களில் அவர்களது வீட்டில் மகாபாரதம், இராமாயணம், மதுரைவீரன் கதை போன்ற கதா காலட்சேபம் சதா காலமும் நடந்து கொண்டே இருக்குமாம். ஊரிலேயே அவரது தந்தையார்தான் அதிகம் படித்தவர். இரண்டாம் வகுப்புவரை படித்துள்ளதாகக் கூறுவார். அதற்குப் பள்ளிச் சான்றிதழ் ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் நன்கு எழுதப் படிக்கத் தெரியும். கிராமத்துப் போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்தார். எட்டுப்பட்டி மக்களுக்கும் கடுதாசி வாசித்துக் காட்டிப் பதில் எழுதிப் போடுபவர் இவர்தான். வரும் கடிதங்களில் முகவரியில் உள்ள ஆங்கிலப் பெயர்களைக் கூட வாசித்துச் சரியான நபரிடம் தபாலைச் சேர்த்து விடுவார். எட்டுப்பட்டிக்கும் சேர்த்து ஒரேயொரு பலசரக்குக் கடை அவர்களுடையது. மக்களுக்குத் தேவையான நாட்டு மருந்துகளும் கிடைக்கும். அவரது அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆடு, மாடுகள், பத்து ஆட்களை வைத்துக் காட்டில் வேளாண்மையைக் கவனித்துக் கொண்ட ’பண்ணைக்காரச்சி’ அவர்கள்.
அவரது பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகள் பிறந்து சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்களில் இறந்து போயின. கடைசியாக மூன்று பிள்ளைகளே மிஞ்சின. ஓர் அக்கா – தவமணி. அவரைவிட ஐந்து வயது மூத்தவர். ஓர் அண்ணா – தங்கவேல். அவரைவிட இரண்டு வயது மூத்தவர். எனது இரண்டாவது வயதில் அனைவரும் அவர் இறந்து போனதாக நினைத்திருக்க, ஆச்சரியமாகப் பிழைத்துக் கொண்டார்.
அவர்களது வீட்டில் பிள்ளைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதும் பழக்கம் கிடையாது. அவர் கல்லூரியில் படிக்கும்போது, பிறந்தநாள் கொண்டாட ஆசை வந்து தனது அம்மாவிடம் கேட்டபோது, உத்தேசமாக இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஆவணி மாதக் கடைசியில் ஒரு புதன்கிழமை ஆறு மணிக்குப் பிறந்ததாகக் கூறினார். அவராகவே ஒரு கணக்குப் போட்டு அவருடைய பிறந்த நாளை 12-09-1951 என வைத்துக் கொண்டார். ஆனால் அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவரது பிறந்த தேதி 06-06-1950. அவர் கூவக்காபட்டிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேரும்போது ஆசிரியர் அவரிடம் பிறந்த தேதி கேட்க, அவர் தெரியாது என்று சொன்னார். எதிரே தொங்கிய காலண்டரைப் பார்த்தார். 1960 ஜூன் 6. ‘ஐந்தாம் வகுப்பில் சேருகிறாய். ஆக பத்து வயது. இன்று தேதி 06-06-1960. ஆக, உன் பிறந்த தேதி 06-06-1950’ என்று சொல்லி, அவ்வாறே எழுதிக் கொண்டார். ஐந்தாம் வகுப்பில் சேரும்போது ஒன்பது வயதுதானே முடிந்திருக்கும்? அவரது கணக்குப்படி பார்த்தாலும் அவரது பிறந்த தேதியை 06-06-1951 என்றுதான் போட்டிருக்க வேண்டும். இதுதான் குத்துமதிப்பு என்பது. அந்தப் பள்ளியில் அவரோடு படித்த அனைவருமே ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் (!) என்பது குறிப்பிடத் தக்கது.
தொடக்கப் பள்ளிக் கல்வி
ஊருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும், கூவக்காபட்டித் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு இரண்டு ஆண்டுகளும் படித்து முடித்தார்.
ஊர் மக்களிடையே இருந்த கோஷ்டித் தகராறு காரணமாகக் கூவக்காபட்டியில் இருந்த மேலாண்மைத் தொடக்கப்பள்ளி மூடப்பட்டது. ஊர் ஜமீன், அவருடைய அப்பாவெல்லாம் ஒரு கோஷ்டி. இந்த கோஷ்டியைச் சார்ந்த பிள்ளைகள் எல்லாம் ஜமீந்தார் அரண்மனைத் திண்ணையிலும், புளிய மரத்தடியிலும், பினாங்குக்காரர் வீட்டுத் தகரக் கொட்டகையிலும் படித்தோம். அவருடைய முதல் வகுப்பின் பெரும்பகுதி இவ்வாறாகக் கழிந்தது. ஒன்றும் சரிப்பட்டு வராமல் போகவே அவரது அப்பா கோஷ்டியினர் அவர்களையெல்லாம் அவர்கள் ஊருக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள வெள்ளைய கவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். சேர்ந்த ஒரு மாதத்திலே முழுப் பரீட்சை வந்துவிட்டது. பக்கத்துப் பையன் சிலேட்டைப் பார்த்து எழுதி பாஸ் செய்துவிட்டார்.
கூவக்காபட்டியிலிருந்து வெள்ளைய கவுண்டனூர் வெகுதூரத்தில் இருப்பதுபோல் அவர்களுக்கு இருந்தது. அவ்வளவு தொலைவு தினமும் நடந்து போய்வருது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஒரு கையில் பள்ளிக் கூடத்துப் பை தோளில். இன்னொரு கையில் தூக்குச் சட்டி. போகும் பாதை இருபுறமும் வேள மரங்களும் முட்புதர்களும் கொண்ட அடர்ந்த வேலிகளுக்கு நடுவே செல்லும். வேலிகளில் கோவைக் கொடி படர்ந்து இருள் சூழ்ந்து காணப்படும். பயம் தெரியாமல் இருக்கப் பாட்டுப் பாடிக் கொண்டே பள்ளிக்குச் சென்று வருவார்கள். நான்காம் வகுப்புவரை அப்பள்ளீயில்தான் படித்தார்.
இதற்கிடையே அவர்களது ஊர் கோஷ்டிகளிடையே சமரசம் ஏற்பட்டுப் பள்ளி திறக்கப்பட்டது. கூவக்காபட்டிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பில் அவர்தான் முதல் ரேங்க். ஆறாம் வகுப்புக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ள வேடசந்தூர் செல்ல வேண்டும். அது சாத்தியமில்லை என்பதால் மீண்டும் ஓராண்டு ஐந்தாம் வகுப்பே படித்தார். (1962).
உயர்நிலைப் பள்ளிக் கல்வி
வேடசந்தூர் கழக உயர்நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி) ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்து முடித்தார். அப்போது பதினோராம் வகுப்பு வரைதான் பள்ளிக் கல்வி. பிறகு கல்லூரியில் பியுசி படிக்க வேண்டும். அதன் பிறகே பட்டப் படிப்பு. பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினார்.
இரண்டாவது ஆண்டு ஐந்தாம் வகுப்பு முடித்த தருவாயில், அவர்களுடைய குடும்பத்தினர் பட்டிருந்த கடனுக்காக இவர்களுடைய புன்செய் நிலத்தையும், குடியிருந்த வீட்டையும் கடன் கொடுத்தவருக்கே எழுதி வைக்க வேண்டியதாயிற்று. புதிய வாழ்க்கையைத் தேடி அருகிலுள்ள சிறு நகரான வேடசந்தூருக்குக் குடிபெயர்ந்தனர். வேடசந்தூர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார் (1963). பள்ளி அதிக தூரம் இல்லை. ஆற்றைக் கடந்து திருச்சி சாலையில் அரை மைல் தூரம் நடக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ரேங்க் என்பதால் அந்தப் பள்ளியின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். பதினோராம் வகுப்பில் இவர்தான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துத் தினத்தந்தி பரிசு வாங்க வேண்டும், வாங்குவார் என்று அவருடைய ஆசிரியர்கள் எல்லாம் கூறினார்கள். அவருக்கு அப்படிப்பட்ட எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வில் 600-க்கு 479 மதிப்பெண்கள் எடுத்துத் தேறினார் (1968).
மாநில முதல் மதிப்பெண் 529. அதைவிட 50 மதிப்பெண் குறைவு என்றாலும் அன்றைய கால கட்டத்தில் இது அதிகமான மதிப்பெண் என்று அனைவரும் கூறினர். அவர்களுடைய பள்ளியைப் பொறுத்த வரை அது மிக அதிக மதிப்பெண். அவர்கள் பள்ளி தொடங்கிய நாளிலிருந்தே இதுதான் அதிக மதிப்பெண் என்று கூறினார்கள்.
கல்லூரிக் கல்வி
சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுரியில் பியுசியும், பிஎஸ்சி கணிதமும் படித்து முடித்தார். பதினோராம் வகுப்பில் அவர் எடுத்த அதிக மதிப்பெண்ணின் பயனாக, அவருடைய கல்விச் செலவு முழுவதையும் அய்ய நாடார் அறக்கட்டளையே ஏற்றுக் கொண்டது.
பதினோராம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அவர் 52-வது ரேங்க் என்பதால், பட்ட மேற்படிப்பு படித்து முடிக்கும் வரைக்கும் அவருக்கு இந்திய அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைத்தது. பிஎஸ்சி கணிதத் தேர்வில் கல்லூரியில் முதல் மாணவனாகவும், மதுரைப் பல்கலைக் கழகத்திலேயே பன்னிரண்டாவது ரேங்க் பெற்றும் தேறினார் (1972).
பல்கலைக் கழகக் கல்வி
மதுரைப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் எம்.எஸ்சி. சிறப்புக் கணிதம் பயின்றார். உலகத் தரம் வாய்ந்த கணிதப் பேராசிரியர்களிடம் கணிதம் கற்றார். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, தேர்வு முறை எல்லாமே அமெரிக்க, இங்கிலாந்துப் பல்கலைக் கழகங்களில் உள்ளது போன்றே இருந்தது. அவர்கள் வகுப்பில் பயின்ற சரிபாதிப்பேர் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே போய்விட்ட நிலையில் அவர் நன்றாகப் படிக்கும் மாணவன் எனப் பெயரெடுத்தார். முதல் வகுப்பும், இரண்டாம் ரேங்கும் எடுத்துத் தேறினார் (1974).
பட்டப் படிப்புக்குப் பிறகு எம்ஏ தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்றே அவருக்கு ஆசை. ஆனால் அவரது கல்லூரிக் கணிதப் பேராசிரியர் திரு.பவுன்ராஜா அவர்கள் எம்எஸ்சி கணிதம்தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தினார். ”உனக்கு எம்.ஏ. படித்தவர்களைவிட அதிகமாகவே தமிழ் இலக்கிய அறிவு உள்ளது. இனிமேல் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. மேலும் தமிழ்ப் பேராசிரியர் ஒருவரைவிடக் கணித வல்லுநர் ஒருவர் தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும் பேசினால் அனைவரும் அக்கறையோடு கேட்பார்கள்” என்பது அவருடைய அனுபவவாதம். அவர்தான் மதுரைப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறையில் எம்.எஸ்சி. சிறப்புக் கணிதப் படிப்பில் சேர்த்து விட்டார். அய்ய நாடார் அறக்கட்டளையின் கல்விக் கடனையும் போராடிப் பெற்றுத் தந்தார். எம்.எஸ்சி. படித்து முடித்தபின் அவர்கள் கல்லூரியிலேயே அவர் கணித ஆசிரியாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவருடைய ஆசிரியர் ஆசைப்பட்டார்.
அவருடைய கல்வித் தகுதி:
எம்.எஸ்சி. (கணிதம்)
எம்.ஏ. (தமிழ்இலக்கியம்)
எம்.எல். (தொழிலாளர்சட்டம்)
எம்.பி.ஏ. (மனிதவளமேலாண்மை)
எம்.சி.ஏ. [முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாடு]
மதுரைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.ஃபில். (தொழிலாளர் மேலாண்மை) படித்து, எழுத்துத் தேர்வுகள் தேறிய போதும் ஆய்வுக் கட்டுரை (Thesis) சமர்ப்பிக்க முடியாமல் போனதால் பட்டம் பெறவில்லை.
எம்.எஸ்சி. கணிதம் படித்த பிறகு தொலைதொடர்புத் துறையில் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும், தமிழ் எம்.ஏ. படிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் கனன்று கொண்டேதான் இருந்தது. 1979-இல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி அறிமுகப்படுத்திய புதிதில் அதில் சேர்ந்து பயின்றார். கல்லூரியில் படிப்பவர்க்கும், அஞ்சல்வழி படிப்பவர்க்கும் பாடத்திட்டமும், தேர்வும் ஒன்றேதான். இறுதித் தேர்வில் பல்கலைக் கழகத்திலேயே ஐந்தாம் ரேங்க் எடுத்தார்.
சென்னை சட்டக் கல்லூரியில் மாலைக் கல்லூரி வகுப்புகள் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டுப் பிறகு தொடங்கியபோது அதில் சேர்ந்தார். அவருக்கு இடம் கிடைக்க பி.எஸ்சி., எம்.எஸ்சி. மதிப்பெண்கள் கைகொடுத்தன. பி.எல். தேர்வுகள் அனைத்தையும் தமிழிலேயே எழுதினார். பாடப் புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். வகுப்புகளும் ஆங்கிலத்திலேயே நடக்கும். அப்போதெல்லாம் தமிழில் சட்டப் புத்தகங்கள் அதிகம் இல்லை. தேர்வுகளில் கலைச்சொற்களை அவரே தமிழாக்கம் செய்து எழுதினார். அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களைத் தருவார். பி.எல்.தேர்வில் முதல் மாணவனாகத் தேறினார். தமிழில் தேர்வெழுதி முதல் ரேங்க் எடுத்தது சாதனையாகக் கருதப்பட்டது.
அடுத்த ஆண்டே சென்னைச் சட்டக் கல்லூரியில் எம்.எல். படிப்புக்கு விண்ணப்பித்தார். ஒரு பிரிவில் இடம் கிடைப்பதே அரிதாக இருந்த காலத்தில் அவருக்கு விண்ணப்பித்த மூன்று பிரிவுகளிலும் இடம் கிடைத்தது. அவர் தொழிலாளர் சட்டம் தேர்ந்தெடுத்துப் படித்தார். அவரோடு எம்.எல். சேர்ந்தவர்களுள் அவர் மட்டுமே படித்து முடித்துப் பட்டம் வாங்கியவர் ஆவார்.
அக்காலத்தில் எம்.பி.ஏ. படிப்பு மிகப்பெரிய படிப்பாகக் கருதப்பட்டது. அப்போது, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டுமே, தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ. படிப்பை நல்கியது. அவரும் அவருடைய நண்பர்களும் அதில் சேர்ந்தனர். இரண்டு சதவீத மாணவர்களே படித்து முடித்துப் பட்டம் பெறுவார்கள். பாடங்களும், பயிற்சித்தாள்களும், தேர்வுகளும் அவ்வளவு கடினமாக இருக்கும். எந்தத் தாளிலும் தோல்வி அடையாமல் அவர் முதல்வகுப்பில் தேறினார். இறுதி செமஸ்டரில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட, தமிழுக்கான ‘ஆப்டிக்கல் கேரக்டர் ரெகக்னிஷன்’ தொடர்பான அவரது பிராஜெக்ட் மிகுந்த பாராட்டுகளையும் மதிப்பெண்களையும் பெற்றுத் தந்தது.
கணிப்பொறியில் ஒரு சான்றிதழ் படிப்புக்கூடப் படித்ததில்லை என்றாலும் களப்புலமை காரணமாகவே கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தமிழ் கம்ப்யூட்டரில் எழுதிய கணிப்பொறிப் பாடங்களின் தரங்கருதியே, பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.சி.ஏ. மாணவர்களுக்குப் பாடம் நடத்த அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் எழுதும் வாய்ப்பும் வந்தது. ஆனால், கணிப்பொறியியலில் அவர் முறைப்படியான பட்டம் எதுவும் பெற்றவில்லை என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. எனவே கணிப்பொறியியலில் பட்டம் பெற முடிவெடுத்தார்.
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்தார். காலையில் பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.சி.ஏ. மாணவர்களுக்கு ஆசிரியராகப் பாடம் நடத்துவார். பிற்பகல் இந்திரா காந்தி பல்கலைக் கழக எம்.சி.ஏ. வகுப்பில் மாணவனாக அமர்ந்து அதே பாடத்தைக் கேட்பார். வரலாற்றில் இதுபோல எவருமே ஒரே நேரத்தில் ஒரே பட்டப் படிப்பில் ஆசிரியராகவும், மாணவராகவும் இருந்திருக்க முடியாது என அவருடைய நண்பர்கள் கூறுவார்கள். எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகம் எழுதும் வாய்ப்பு மீண்டும் வந்தது. பாடத்திட்டக் குழுவிலும் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பணி அனுபவம்
இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையில் (தற்போது பி.எஸ்.என்.எல்.) 1974 ஜூன் முதல் 2007 மே வரையில், இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி, உதவி இயக்குநர், கணிப்பொறி விரிவுரையாளர், பொறியியல் அதிகாரி, துணக்கோட்டப் பொறியாளர், முதுநிலைத் துணைக்கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் 33 ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு (முழுப் பணிக்காலமும் சென்னை நகரிலேயே) 2007 மே 20-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் எம்.எஸ்சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய தொலைதொடர்புத் துறையில் இளநிலைப் பொறியாளர் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு, பரிந்துரை எதுவும் இல்லாமல் பி.எஸ்சியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த வேலை கிடைத்தது. அரையாண்டுத் தேர்வின்போதே பணிக்கான பயிற்சியில் சேர ஆணை வந்தது. ஆனாலும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, படிப்பு முடிந்து தேர்வு எழுதிய பிறகு பயிற்சியில் சேர அனுமதி கிடைத்தது. 1974 ஜூன் 10-ஆம் நாள் பெங்களூர் பயிற்சியகத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.
எட்டு மாத காலக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, திருச்சிக் கோ-ஆக்சியல் நிலையத்தில் ஒரு மாத காலக் களப் பயிற்சிக்குப் பிறகு, 1975 மார்ச்சு 10-ஆம் தேதி சென்னைத் தலைமைத் தொலை தொடர்பகத்தில் (பாரிமுனை, பூக்கடை) பணியில் சேர்ந்தார். அவர் படித்த சிவகாசிக் கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் ஆதித்தனார் கல்லூரியிலும் கணித விரிவுரையாளர் பதவி தேடி வந்த போதும் அவற்றை வேண்டாம் என மறுத்து, தொலைதொடர்புத் துறைப் பணியிலேயே தொடர்ந்தார். ஒரே அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி ஆகிய பதவிகளில் தொடர்ந்து பதினெட்டரை ஆண்டுகள் பணியாற்றினார். இடையில் இரண்டு மாத காலம் பாண்டிச்சேரியில் நுண்ணலை நிலையத்தில் தற்காலிகத் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்தார்.
1993 அக்டோபர் 21-இல் பதவி உயர்வு பெற்றுத் தமிழ்நாடு வட்டத் தொலைதொடர்புத் தலைமையகத்தில் (சென்னை அண்ணாசாலை) மேலாண்மைத் தகவல் அமைப்புப் பிரிவில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டு காலம் அப்பதவியில் இருந்தபோது பணிநிமித்தமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்.
1996 ஜனவரியில் கணிப்பொறி விரிவுரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டலத் தொலைதொடர்புப் பயிற்சி மையத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகச் சேர்ந்தார். இந்தியா முழுவதிலுமிருந்து வருகின்ற தொலைதொடர்புப் பணியாளர்களுக்குக் கணிப்பொறிப் பயிற்சி அளிக்கும் பணியில் ஏழாண்டு காலம் சேவை புரிந்தார். கோடை விடுமுறையில் பயிற்சியகத்தில், அவர் துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு (பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவர்கள்) கணிப்பொறிப் பாடம் கற்றுத் தந்துள்ளார். மாலை நேரங்களில், சனி, ஞாயிறுகளில் அவர் துறையின் தலைமைப் பொது மேலாளர் உட்பட உயர் அதிகாரிகளுக்குக் கணிப்பொறிப் பயன்பாடுகளைக் கற்றுக் கொடுத்துள்ளார். ‘மிகச் சிறப்பாகக் கணிப்பொறி கற்றுத்தரும் ஆசிரியர்’ என ஊழியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் ஆகிய அனைத்துத் தரப்பாரின் ஒருமித்த பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
2003 ஜனவரியில் வடக்குப் பிரிவு மேலாளர் அலுவலத்தில் பொறியியல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நுங்கம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த அகல்கற்றைச் சேவைப் பிரிவில் துணைக்கோட்டப் பொறியாளராகச் சேர்ந்தார். சென்னையில் பி.எஸ்.என்.எல்லின் அகல்கற்றைச் சேவையை அறிமுகப்படுத்தியதில் இவருக்கும் பங்குண்டு. 2006 ஜனவரியில் தற்காலிகப் பதவி உயர்வு பெற்று, கேகேநகர் தகவல் தொழிநுட்ப மையத்தில் கோட்டப் பொறியாளராகச் சேர்ந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, 33 ஆண்டு கால நீண்ட சேவைக்குப்பின், 2007 மே 20-ஆம் நாள் விருப்ப ஓய்வு பெற்றார்.
இலக்கிய அனுபவம்
பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் அவர் ஓர் இலக்கியவாதியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளார். இலக்கிய ஆர்வலராகவும், படைப்பாளியாகவும், விமர்சகராகவும் இருந்துள்ளார். கவிஞனாக வாழ்ந்திருக்கிறார். யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறார். மரபுக் கவிதைகளின் நீள, அகல, ஆழங்களைக் கண்டிருக்கிறார். வெண்பாவில் விளையாடி இருக்கிறார். எண்சீர் விருத்தங்களில் இழைந்திருக்கிறார். புதுக்கவிதை என்று சொல்லப்படும் இக்காலக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளார். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளார். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறார்.
முதல் கவிதை
அவர் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது அவருடைய தமிழாசிரியர் இரா.தி.இராசன். அக்காலத்தில் மதுரை மாவட்டக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட ‘கூட்டுறவு’ என்னும் பத்திரிகையில் அவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரும். ஒருநாள் அவர் இவரை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று, பத்திரிகையில் வெளிவந்த தன்னுடைய படைப்புகளை இவருக்குக் காண்பித்தார். ”இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே உன்னுடைய கவிதை இந்தப் பத்திரிகையில் வெளிவரவேண்டும்” என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் இவர் எந்தக் கவிதையும் எழுதியதில்லை. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று இவருக்கு அப்போது புரியவில்லை என்று கூறியுள்ளார்.
இவர் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது அந்தப் பத்திரிகைக்கு ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் ஒரு கவிதை (எண்சீர் விருத்தங்கள்) எழுதி அனுப்பியிருந்தார். இவர் படிப்பு முடிக்கும்வரை அந்தக் கவிதை வெளிவரவில்லை. இவர் கல்லுரியில் சேர்ந்த முதல் மாதத்தில், கூட்டுறவு இதழில் வெளிவந்த என் கவிதையைப் பார்த்துவிட்டு, அவருடைய தமிழாசிரியர் வித்துவான் நாராயணசாமி அவர்கள் மிகவும் பாராட்டி இவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இரா.தி.இராசன் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டதாக ஆனந்தம் அடைந்தார். இவர் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே கவிதைகள் எழுதிவந்த போதும் முதன்முதலில் பிரசுரமான கவிதை இதுதான்.
முதல் வெண்பா
இவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, புலவர் பழனியப்பன் அவர்கள் நளவெண்பாவைச் சுவைபடச் சொல்லிக் கொடுத்தார். அதனால் நளவெண்பா மீதும், வெண்பா என்னும் பாவகை மீதும் எனக்கு அலாதிக் காதல் பிறந்தது. யாப்பிலக்கணம் பயின்று வெண்பாப் பாட வெறி கொண்டார். இவருடைய அண்ணாவுடன் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காளியப்பனிடம் (அவருக்கு யாப்பிலக்கணம் தெரியும்) ஆலோசனை கேட்டார். ”வெண்பா எழுதுவது மிகவும் கடினம். உன்னால் எழுத முடியாது” என்று அதைரியப் படுத்தினார். வற்புறுத்திக் கேட்டபோது, மாவட்டக் கிளை நூலகத்தில் ஒரு யாப்பிலக்கண நூல் இருப்பதாக்க் கூறினார்.
நூலகம் சென்று அப்புத்தகத்தைத் தேடி எடுத்தார். ஆனால் நூலகரோ தர மறுத்தார். ”உனக்கு இது புரியாது. யாருக்காக இதை எடுத்துச் செல்கிறாய் என்று சொன்னல்தான் தருவேன்” என்று சாதித்தார். “நான் படிக்கத்தான் எடுத்துச் செல்கிறேன். இதைத் திரும்பக் கொண்டுவந்து தரும்போது, இதில் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன்” என்று சவால் விட்டார். என் ஆர்வத்தைப் பார்த்து அவர் புத்தகத்தைக் கொடுத்தார். அதன்பின் அவர் இவர்மீது பிரியம் காட்டும் நண்பராகிப் போனார். அந்த நூலகத்திலிருந்த முக்கியமான நூல்களையெல்லாம் நான் படித்தறியக் காரணமாக இருந்தார்.
ஒரே மூச்சில் யாப்பிலக்கணம் படித்து முடித்தார். உடனே இலக்கணப் பிழையின்றி ஒரு வெண்பாவை எழுதினார். இவர் எழுதிய முதல் வெண்பாவைக் காளியப்பனிடம் சென்று காண்பித்தார். அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இதுதான் என் முதல் வெண்பா:
வெண்பா எழுத விருப்ப(ம்)மிகக் கொண்டேநான்
என்பா எழுதிட ஏடெடுத்தேன் – நண்பா,
கடிதென்றார் காளியப்பன்; கற்(று)உடனே பாடி
முடித்தேனோர் வெண்பா முயன்று.
பள்ளிக் கல்வி முடித்துக் கல்லூரி நுழைந்த காலகட்டத்தில் வெண்பாவும், எண்சீர் விருத்தமும் இவர் கைவசமாயின. அந்தக் காலத்தில் கவிதை இதழ்களில் ஈற்றடி கொடுத்து அவ்வடியில் முடியுமாறு வெண்பா இயற்றப் போட்டிகள் நடத்தப்படுவதுண்டு. ஈற்றடி கொடுத்தவுடன் அடுத்தடுத்து வெண்பாக்களை அடுக்கிக் கொண்டே போவார். கல்லூரி நண்பர்கள் அஞ்சலட்டை கொண்டுவந்து எழுதிக் கொள்வர். அவர்கள் பெயரிலே அவை பிரசுரமாகும். இவருடைய பெயரிலும் வெண்பாக்கள் வெளிவந்துள்ளன. பரிசுகளும் பெற்றுள்ளார். நண்பர்களுடன் வெண்பாவின் ஈற்றடியிலேயே உரையாடி வெறுப்பேற்றுவார். நண்பர்களுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம் எண்சீர் விருத்தத்திலேயே இருக்கும்.
மீராதாசன்
அக்காலத்தில் தமிழ் யாப்பிலக்கணப்படி எழுதப்படும் கவிதையே ’கவிதை’ எனப்பட்டது. யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில் ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் அதைத்தான் ’கவிதை’ என்கின்றனர். யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆகிப்போனது. 1968-1972 ஆண்டுகளில் மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த இவர் புதுக்கவிதைகளையும், புதுக்கவிதை எழுதும் கவிஞர்களையும் வெறுத்து ஒதுக்கினார். 1972-இன் பிற்பகுதியில் கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலைப் படித்த அன்று இரவே புதுக்கவிதை பற்றிய கருத்தை மாற்றிக் கொண்டார். மீராதாசன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகளும் புனையத் தொடங்கினார்.
என்ன காரணத்தாலோ இவர் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகச் சில கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பிரசுரமாகியுள்ளன. பல கவிதைகளை இவர் பாடியதோடு சரி. அல்லது நண்பர்களுக்கு எழுதி அனுப்பியதோடு சரி. ஆனால் அனைத்துக் கவிதைகளையும் இவர் படியெடுத்து வைத்துக் கொண்டது கிடையாது. எனது பழைய டயரிகள், நோட்டுப் புத்தகங்களில் தேடிப் பிடித்தும், என் கவிதைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் நண்பர்களிடம் கேட்டு வாங்கியும் சில கவிதைகளை இந்த வலையகத்தில் வெளியிட்டு வந்தார்.
இலக்கிய இதழ் ’சகாப்தம்’
சென்னையில் பணியில் சேர்ந்தவுடனே இலக்கிய அன்பர்களைத் தேடிச் சேர்த்துக் கொண்டார். 1977-இல் ஜெயபாலன் (கலாமணி), மாரியப்பன் (கார்க்கியன்), தங்கமுத்து(ஜீவகன்), ரங்கசாமி (பார்த்திபன்) ஆகியோருடன் சேர்ந்து சகாப்தம் என்ற பெயரில் இலக்கியச் சிற்றிதழை வெளியிட்டார். இலவச இதழ். நன்கொடை மூலம் நடத்தப்பட்டது. திருச்சியில் என் நண்பர் பாலு (கரிகாலன் அச்சகம்) சகாப்தம் இதழை அச்சிட்டுத் தந்தார். ஆறு இதழ்களுக்குப்பின் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு மக்கள் சகாப்தம் என்ற பெயரில் வெளியானது. கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. இரண்டு ஆண்டுகள், பதின்மூன்று இதழ்களோடு சகாப்தம் நின்று போனது.
சகாப்தம் இலக்கிய உலகில் முத்திரை பதித்தது. கலாமணியின் சிறுகதை ‘படிதாண்டிய பத்தினி’ கார்க்கியன் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், கோயில் வாசல் பிச்சைக்காரர்களிடம் எடுத்த பேட்டிகளான, ‘மணல்வெளி மனிதர்கள்’, ‘ஒரு தெய்வ சன்னதியில் சில மனித தரிசனங்கள்’ ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. விட்டல்ராவ், பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் சகாப்தத்தில் எழுதினார்கள். சு.சமுத்திரம், பாலகுமாரன், வல்லிக்கண்ணன் போன்றோர் ஊக்கமூட்டினர். பாரதிராஜாவின் முதல்படம் ‘பதினாறு வயதினிலே’ வெளிவந்த ஒருவாரத்திலேயே பாரதிராஜாவைப் பேட்டிகண்டு வெளியிட்டனர். பாரதிராஜா பத்திரிகைக்குக் கொடுத்த முதல் பேட்டி அதுதான். “தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டது, உலகப் புகழ்பெறப்போகும் ஓர் இயக்குநர் கிடைத்துவிட்டார்” என்று அந்தப் பேட்டிக் கட்டுரையில் எழுதினார்கள்.
வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இலக்கிய வானில் சகாப்தம் மின்னல்போல் தோன்றி மறைந்தாலும் ஓர் ஆழமான முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கணிப்பொறித் துறை அனுபவம்
ஓர் இலக்கியவாதியாகப் பரிணமித்த இவர் காலப்போக்கில் ஒரு கணிப்பொறி வல்லுநராய் மாறிப் போனார். கணிப்பொறி அறிவியலைச் சொந்தமாகவே கற்றுக் கொண்டு அதில் கரை கண்டார். பல மென்பொருள்களை உருவாக்கியுள்ளார். பத்திரிகைகளில் கணிப்பொறி தொடர்பாக நிறைய எழுதியுள்ளார். ’கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதிய முன்னோடி’ எனப் பெயர் பெற்றுள்ளார். கணிப்பொறி அறிவியலின் உயர்நிலைத் தொழில்நுட்பங்களை எளிதில் புரியும்படித் தமிழில் எழுதியுள்ளார். கணிப்பொறி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக எம்சிஏ மாணவர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார். தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் எழுதியுள்ளார். கணிப்பொறி அறிவியலில் ஏராளமான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
மென்பொருள் உருவாக்கம்
1986-87 இல் கணிப்பொறி ஓர் அபூர்வப் பொருளாய் இருந்த காலத்திலேயே இவர் பணிபுரிந்த அலுவலத்தில் இருந்த கணிப்பொறியில் மூழ்கிப் போனார். யாருடைய உதவியுமின்றி தானாகவே கற்றுக் கொண்டார். அலுவலகத்தில் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். ஓராண்டு கடுமையான உழைப்பில் எம்எம்எஸ் (Mux Maintenance System) என்னும் மென்பொருள்களை உருவாக்கி, 1989-ஆம் ஆண்டிலேயே அவர்களுடைய அலுவலகத்தைத் தாளில்லா அலுவலகமாய் (Paperless Office) மாற்றி அமைத்தார். அதற்காகப் பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத் தொகையும் பெற்றுள்ளார். அவர்களுடைய அலுவலகம் ‘சிறந்த நிலையம்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது.
தமிழ்நாடு வட்டத் தொலைதொடர்புத் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது மிஸ்ட் (Management Information System for Telecom) என்னும் மேலாண்மைத் தகவல் மென்பொருளை உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அலுவலகங்களில் அவற்றை நிறுவினார். பத்து நாட்கள் பாடுபட்டுத் தப்பும் தவறுமாகத் தயாரிக்கப்படும் மேலாண்மைத் தகவல் அறிக்கையை மென்பொருள் மூலமாகப் பத்து நிமிடத்தில் துல்லியமாகத் தயாரிக்க முடிந்தது.
மண்டலத் தொலைதொடர்புப் பயிற்சி மையத்தில் பணியாற்றிய காலத்தில் பயிற்சி முடித்த மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவுகளை தர வரிசைப்படி வெளியிடும் மார்க்சிஸ்ட் (MarkSyst) என்னும் மென்பொருளை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களைக் கையாள மாக்பிஜி (Ministry of Communication Public Grievence) என்னும் மென்பொருளை உருவாக்கித் தந்தார்.
வளர்தமிழ் பதிப்பகத்துக்கு (வளர்தொழில், தமிழ் கம்ப்யூட்டர் வெளியீட்டாளர்) பத்திரிகைச் சந்தாக்களைக் கையாளும் சப்ஸ்கிரிப் (Subscrip) என்னும் மென்பொருளைத் தயாரித்துக் கொடுத்தார். ஏனோ அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை.
கர்நாடக மாநிலத்து தொலைதொடர்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஓசிபி வகைத் தொலைபேசியகங்களில் மின்காந்த நாடாவிலிருந்து தொலைபேசி அழைப்புகளின் விவரங்களைப் படித்தறிவதற்காக ஓசிபிஎட்ரெட் (OCBEdRet – OCB Exchange Data Retrieval) என்னும் மென்பொருளை உருவாக்கிக் கொடுத்தார். குற்றவாளிகளின் தொலைபேசி அழைப்பு விவரங்களைத் தோண்டியெடுத்து, எந்த நேரத்தில் யார்யாரோடு பேசினார்கள் என்று கண்டறியப் பயன்படும் மென்பொருள் அது. கர்நாடகாவிலிருந்து ஒவ்வொரு மாநிலமாகப் பரவி, நாளடைவில் இந்தியா முழுவதும் அந்த மென்பொருளைப் பரவலாகப் பயன்படுத்தினார்கள் என்று அவருக்கு வந்த மின்னஞ்சல்கள் தெரிவித்தன.
எம்.சி.ஏ. படிப்பின் திட்டப்பணியாக, தமிழ் ஓசிஆருக்குப் (Optical Character Recognition) பயன்படக் கூடிய, ஆவண உருவரை உணர்தலுக்கான (Document Layout Recognition) மென்பொருளை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கினார்.
சென்னைத் தொலைபேசியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பணிபுரிந்தபோது, சென்னைத் தொலைபேசியின் கணிப்பொறித் தரவுத்தளத்தில் ஒற்றை வரியில் சேமிக்கப்பட்டிருந்த பத்து லட்சம் வாடிக்கையாளர்களின் வீட்டு முகவரியைப் பெயர், கதவெண், வீட்டுப் பெயர், தெரு, ஊர், வட்டாரம், நகர், பின்கோடு எனப் பிரிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கினார்.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி
1993-94 ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கற்போம் கம்ப்யூட்டர் என்னும் தலைப்பில் கணிப்பொறிப் பாடங்களைத் தமிழில் எழுதினார். 1994 முதல் 2006 வரை தமிழ் கம்ப்யூட்டர் இதழில் சி, சி++, சி#, நெட்வொர்க் பாடங்களை எழுதினார். கணிப்பொறி தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதினார். கணிமொழி இதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2004-05 ஆண்டுகளில் தினமணி நாளிதழில் கம்ப்யூட்டர் A to Z என்னும் தொடரை எழுதினார். மனோரமா தமிழ் இயர்புக்கில் 1997 முதல் பல ஆண்டுகள் தொடர்ந்து, கணிபொறி, இணையம், பிணையம், மின்வணிகம், மின்வெளிச் சட்டங்கள், செல்பேசித் தொழில்நுட்பங்கள், வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சென்னை வானொலியில் காலை நிகழ்ச்சியில் தினமும் தொடர்ந்து இன்று ஒரு தகவல் போல, அதிநவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திப் பேசியிருக்கிறார்.
சன், சன் நியூஸ், விஜய் டீவியில் கணிப்பொறித் தகவல்களைக் கூறியிருக்கிறார். வின் டீவியில் ஒரு மணி நேரம் நேரடி ஒலிபரப்பில் பார்வையாளர்களின் கணிப்பொறித் துறை தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். மக்கள் டீவியில் சிறப்பு விருந்தினர் பகுதியில் கணிப்பொறி துறையில் பங்களிப்பு பற்றிய இவருடைய பேட்டி ஒளிபரப்பானது.
கணிப்பொறி ஆசிரியர் பணி
1996 முதல் 2003 வரை தொலைத் தகவல்தொடர்புத் துறையின் பயிற்சி மையத்தில் கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதே காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வியில் எம்சிஏ பயின்ற மாணவர்களுக்குச் சென்னைப் படிப்பு மையத்தில் சி, சி++, ஜாவா பாடங்கள் பயிற்றுவித்தார். இவருடைய எழுத்துகளில், வகுப்புகளில் பலன்பெற்ற மாணவர்கள் பலர் இன்றைக்கு இந்தியாவில், வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்ந்த பணிகளில் உள்ளனர். இவருடைய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.
கணிப்பொறி அறிவியல் கலைச்சொல்லாக்கம்
கணிப்பொறியியல் கலைச்சொல்லாக்கத்தில் இவர் பங்கு கணிசமானது. தமிழ்நாடு அரசு 1999-இல் எழுத்தாளர் சுஜாதா தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் இருந்து ஆஃபீஸ் மென்பொருளுக்கான 200 கலைச்சொற்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். Browser என்ற சொல்லுக்கு ‘உலாவி’ என்று இவர் பரிந்துரைத்த சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராக இருந்து, 8000 கலைச்சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவற்றைத் தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் காணமுடியும். சர்வதேச அமைப்பான உலகத் தமிழ் இணைய மன்றத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவில் பணியாற்றி உள்ளார். மணவை முஸ்தபா வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதியின் முதல் தொகுதி இவருடைய மேற்பார்வையில் வெளியானது. இரண்டாம் தொகுதி முழுக்க இவருடைய பங்களிப்பில் வெளியானது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய மென்பொருள்களின் தமிழ்ப் பதிப்பில் பயன்படுத்துவதற்காக ‘கம்யூனிட்டி குளோசரி’ என்ற பெயரில் பயனாளர்களிடமிருந்து கலைச்சொற்களைத் திரட்டியது. அதில் இவர் பரிந்துரைத்த பெரும்பாலான கலைச்சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மைக்ரோசாஃப்டின் மென்பொருள்களில், அந்நிறுவன வலையகங்களில் அச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனமான பாஷா இந்தியாவின் வலையகத்தில் கலைச்சொல்லாக்கம் தொடர்பான இவருடைய பேட்டி வெளியாகியுள்ளது.
ஆய்வுக் கட்டுரைகள்
உலகத் தமிழ் இணைய மன்றம் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, சென்னை ஆகிய இடங்களில் நடத்திய சர்வதேசத் தமிழ் இணைய மாநாடுகளில் கலைச்சொல்லாக்கம் தொடர்பான இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டு மலர்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
பாடப் புத்தகம், நூல்கள்
2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த +1, +2 கணிப்பொறி அறிவியல் பாடத்திட்டக் குழுவில் (Syllabus Committee) உறுப்பினராக இருந்துள்ளார். 2005-இல் +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகத்தையும், 2006-இல் +2 பாடப் புத்தகத்தையும் எழுதினார். எம்.எஸ்சி. கணிப்பொறி அறிவியல் மாணவர்களின் பாடத்திட்டப்படி ‘வருங்கால மொழி சி#’ என்னும் புத்தகத்தை 2005-இல் வெளியிட்டார். டி’பேஸ் வழியாக சி-மொழி, கம்ப்யூட்டர் இயக்க முறைகள், மின்னஞ்சல், டாஸ் கையேடு ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துக்காக பி.ஏ. தமிழியல் பாடத்துக்கான ‘தகவல் தொழில்நுட்பம் – ஓர் அறிமுகம்’ என்னும் பாடநூலை எழுதித் தந்துள்ளேன். ஃபிரெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘Ludwig Feuerbach and the End of Classical German Philosophy’ மற்றும் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். மேலும், நெட்வொர்க் தொழில்நுட்பம், தாய்மொழி-சி, சி++ ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளது. இவற்றில் நெட்வொர்க் தொழில்நுட்பம் என்ற நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினை பெற்றது. மேலும், இதே நூல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தினுடைய தமிழ்ப்பேராயம் அமைப்பின் சிறந்த கணினி நூலுக்கான விருதையும் பெற்றுள்ளது. அவர் மறைவிற்குப் பிறகு தாய்மொழி-சி என்ற நூல் தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான விருதினையும் பெற்றுள்ளது. ‘சூரியனைச் சினேகிக்கும் பனித்துளிகள்’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டு வெல்மின் நிறுவனத்தின் வழியாக வெளியிட்டார்.