
பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் அவர் ஓர் இலக்கியவாதியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இலக்கிய அனுபவம்
பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் அவர் ஓர் இலக்கியவாதியாகவே அடையாளம் காணப்பட்டுள்ளார். இலக்கிய ஆர்வலராகவும், படைப்பாளியாகவும், விமர்சகராகவும் இருந்துள்ளார். கவிஞனாக வாழ்ந்திருக்கிறார். யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறார். மரபுக் கவிதைகளின் நீள, அகல, ஆழங்களைக் கண்டிருக்கிறார். வெண்பாவில் விளையாடி இருக்கிறார். எண்சீர் விருத்தங்களில் இழைந்திருக்கிறார்.
புதுக்கவிதை என்று சொல்லப்படும் இக்காலக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளார். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளார். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறார்.
முதல் கவிதை
அவர் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது அவருடைய தமிழாசிரியர் இரா.தி.இராசன். அக்காலத்தில் மதுரை மாவட்டக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட ‘கூட்டுறவு’ என்னும் பத்திரிகையில் அவருடைய கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரும். ஒருநாள் அவர் இவரை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று, பத்திரிகையில் வெளிவந்த தன்னுடைய படைப்புகளை இவருக்குக் காண்பித்தார். ”இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே உன்னுடைய கவிதை இந்தப் பத்திரிகையில் வெளிவரவேண்டும்” என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் இவர் எந்தக் கவிதையும் எழுதியதில்லை. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்று இவருக்கு அப்போது புரியவில்லை என்று கூறியுள்ளார்.
இவர் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது அந்தப் பத்திரிகைக்கு ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் ஒரு கவிதை (எண்சீர் விருத்தங்கள்) எழுதி அனுப்பியிருந்தார். இவர் படிப்பு முடிக்கும்வரை அந்தக் கவிதை வெளிவரவில்லை. இவர் கல்லுரியில் சேர்ந்த முதல் மாதத்தில், கூட்டுறவு இதழில் வெளிவந்த என் கவிதையைப் பார்த்துவிட்டு, அவருடைய தமிழாசிரியர் வித்துவான் நாராயணசாமி அவர்கள் மிகவும் பாராட்டி இவருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இரா.தி.இராசன் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டதாக ஆனந்தம் அடைந்தார். இவர் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே கவிதைகள் எழுதிவந்த போதும் முதன்முதலில் பிரசுரமான கவிதை இதுதான்.
முதல் வெண்பா
இவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது, புலவர் பழனியப்பன் அவர்கள் நளவெண்பாவைச் சுவைபடச் சொல்லிக் கொடுத்தார். அதனால் நளவெண்பா மீதும், வெண்பா என்னும் பாவகை மீதும் எனக்கு அலாதிக் காதல் பிறந்தது. யாப்பிலக்கணம் பயின்று வெண்பாப் பாட வெறி கொண்டார். இவருடைய அண்ணாவுடன் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காளியப்பனிடம் (அவருக்கு யாப்பிலக்கணம் தெரியும்) ஆலோசனை கேட்டார். ”வெண்பா எழுதுவது மிகவும் கடினம். உன்னால் எழுத முடியாது” என்று அதைரியப் படுத்தினார். வற்புறுத்திக் கேட்டபோது, மாவட்டக் கிளை நூலகத்தில் ஒரு யாப்பிலக்கண நூல் இருப்பதாக்க் கூறினார்.
நூலகம் சென்று அப்புத்தகத்தைத் தேடி எடுத்தார். ஆனால் நூலகரோ தர மறுத்தார். ”உனக்கு இது புரியாது. யாருக்காக இதை எடுத்துச் செல்கிறாய் என்று சொன்னல்தான் தருவேன்” என்று சாதித்தார். “நான் படிக்கத்தான் எடுத்துச் செல்கிறேன். இதைத் திரும்பக் கொண்டுவந்து தரும்போது, இதில் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்கிறேன்” என்று சவால் விட்டார். என் ஆர்வத்தைப் பார்த்து அவர் புத்தகத்தைக் கொடுத்தார். அதன்பின் அவர் இவர்மீது பிரியம் காட்டும் நண்பராகிப் போனார். அந்த நூலகத்திலிருந்த முக்கியமான நூல்களையெல்லாம் நான் படித்தறியக் காரணமாக இருந்தார்.
ஒரே மூச்சில் யாப்பிலக்கணம் படித்து முடித்தார். உடனே இலக்கணப் பிழையின்றி ஒரு வெண்பாவை எழுதினார். இவர் எழுதிய முதல் வெண்பாவைக் காளியப்பனிடம் சென்று காண்பித்தார். அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
அவருடைய முதல் வெண்பா:
வெண்பா எழுத விருப்ப(ம்)மிகக் கொண்டேநான்
என்பா எழுதிட ஏடெடுத்தேன் – நண்பா,
கடிதென்றார் காளியப்பன்; கற்(று)உடனே பாடி
முடித்தேனோர் வெண்பா முயன்று.
பள்ளிக் கல்வி முடித்துக் கல்லூரி நுழைந்த காலகட்டத்தில் வெண்பாவும், எண்சீர் விருத்தமும் இவர் கைவசமாயின. அந்தக் காலத்தில் கவிதை இதழ்களில் ஈற்றடி கொடுத்து அவ்வடியில் முடியுமாறு வெண்பா இயற்றப் போட்டிகள் நடத்தப்படுவதுண்டு. ஈற்றடி கொடுத்தவுடன் அடுத்தடுத்து வெண்பாக்களை அடுக்கிக் கொண்டே போவார். கல்லூரி நண்பர்கள் அஞ்சலட்டை கொண்டுவந்து எழுதிக் கொள்வர். அவர்கள் பெயரிலே அவை பிரசுரமாகும். இவருடைய பெயரிலும் வெண்பாக்கள் வெளிவந்துள்ளன. பரிசுகளும் பெற்றுள்ளார். நண்பர்களுடன் வெண்பாவின் ஈற்றடியிலேயே உரையாடி வெறுப்பேற்றுவார். நண்பர்களுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம் எண்சீர் விருத்தத்திலேயே இருக்கும்.
மீராதாசன்
அக்காலத்தில் தமிழ் யாப்பிலக்கணப்படி எழுதப்படும் கவிதையே ’கவிதை’ எனப்பட்டது. யாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, தொடக்க காலத்தில் ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் அதைத்தான் ’கவிதை’ என்கின்றனர். யாப்பிலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆகிப்போனது. 1968-1972 ஆண்டுகளில் மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த இவர் புதுக்கவிதைகளையும், புதுக்கவிதை எழுதும் கவிஞர்களையும் வெறுத்து ஒதுக்கினார்.
1972-இன் பிற்பகுதியில் கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலைப் படித்த அன்று இரவே புதுக்கவிதை பற்றிய கருத்தை மாற்றிக் கொண்டார். மீராதாசன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகளும் புனையத் தொடங்கினார்.
என்ன காரணத்தாலோ இவர் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகச் சில கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பிப் பிரசுரமாகியுள்ளன. பல கவிதைகளை இவர் பாடியதோடு சரி. அல்லது நண்பர்களுக்கு எழுதி அனுப்பியதோடு சரி. ஆனால் அனைத்துக் கவிதைகளையும் இவர் படியெடுத்து வைத்துக் கொண்டது கிடையாது. எனது பழைய டயரிகள், நோட்டுப் புத்தகங்களில் தேடிப் பிடித்தும், என் கவிதைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் நண்பர்களிடம் கேட்டு வாங்கியும் சில கவிதைகளை இந்த வலையகத்தில் வெளியிட்டு வந்தார்.
இலக்கிய இதழ் ’சகாப்தம்’
சென்னையில் பணியில் சேர்ந்தவுடனே இலக்கிய அன்பர்களைத் தேடிச் சேர்த்துக் கொண்டார். 1977-இல் ஜெயபாலன் (கலாமணி), மாரியப்பன் (கார்க்கியன்), தங்கமுத்து(ஜீவகன்), ரங்கசாமி (பார்த்திபன்) ஆகியோருடன் சேர்ந்து சகாப்தம் என்ற பெயரில் இலக்கியச் சிற்றிதழை வெளியிட்டார். இலவச இதழ். நன்கொடை மூலம் நடத்தப்பட்டது. திருச்சியில் என் நண்பர் பாலு (கரிகாலன் அச்சகம்) சகாப்தம் இதழை அச்சிட்டுத் தந்தார். ஆறு இதழ்களுக்குப்பின் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு மக்கள் சகாப்தம் என்ற பெயரில் வெளியானது. கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம், திரைப்பட விமர்சனம், கட்டுரைகள், பேட்டிகள் வெளிவந்தன. இரண்டு ஆண்டுகள், பதின்மூன்று இதழ்களோடு சகாப்தம் நின்று போனது.
சகாப்தம் இலக்கிய உலகில் முத்திரை பதித்தது. கலாமணியின் சிறுகதை ‘படிதாண்டிய பத்தினி’ கார்க்கியன் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்கள், கோயில் வாசல் பிச்சைக்காரர்களிடம் எடுத்த பேட்டிகளான, ‘மணல்வெளி மனிதர்கள்’, ‘ஒரு தெய்வ சன்னதியில் சில மனித தரிசனங்கள்’ ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. விட்டல்ராவ், பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் சகாப்தத்தில் எழுதினார்கள். சு.சமுத்திரம், பாலகுமாரன், வல்லிக்கண்ணன் போன்றோர் ஊக்கமூட்டினர். பாரதிராஜாவின் முதல்படம் ‘பதினாறு வயதினிலே’ வெளிவந்த ஒருவாரத்திலேயே பாரதிராஜாவைப் பேட்டிகண்டு வெளியிட்டனர்.
பாரதிராஜா பத்திரிகைக்குக் கொடுத்த முதல் பேட்டி அதுதான். “தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுவிட்டது, உலகப் புகழ்பெறப்போகும் ஓர் இயக்குநர் கிடைத்துவிட்டார்” என்று அந்தப் பேட்டிக் கட்டுரையில் எழுதினார்கள்.
வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இலக்கிய வானில் சகாப்தம் மின்னல்போல் தோன்றி மறைந்தாலும் ஓர் ஆழமான முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.