
Browser என்ற சொல்லுக்கு ‘உலாவி’ என்று இவர் பரிந்துரைத்த சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கணிப்பொறி அறிவியல் கலைச்சொல்லாக்கம்
கணிப்பொறியியல் கலைச்சொல்லாக்கத்தில் இவர் பங்கு கணிசமானது. தமிழ்நாடு அரசு 1999-இல் எழுத்தாளர் சுஜாதா தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் இருந்து ஆஃபீஸ் மென்பொருளுக்கான 200 கலைச்சொற்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார்.
Browser என்ற சொல்லுக்கு ‘உலாவி’ என்று இவர் பரிந்துரைத்த சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2000-ஆம் ஆண்டு முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கக் குழுவில் உறுப்பினராக இருந்து, 8000 கலைச்சொற்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவற்றைத் தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் காணமுடியும்.
சர்வதேச அமைப்பான உலகத் தமிழ் இணைய மன்றத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவில் பணியாற்றி உள்ளார். மணவை முஸ்தபா வெளியிட்ட கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதியின் முதல் தொகுதி இவருடைய மேற்பார்வையில் வெளியானது. இரண்டாம் தொகுதி முழுக்க இவருடைய பங்களிப்பில் வெளியானது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய மென்பொருள்களின் தமிழ்ப் பதிப்பில் பயன்படுத்துவதற்காக ‘கம்யூனிட்டி குளோசரி’ என்ற பெயரில் பயனாளர்களிடமிருந்து கலைச்சொற்களைத் திரட்டியது. அதில் இவர் பரிந்துரைத்த பெரும்பாலான கலைச்சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மைக்ரோசாஃப்டின் மென்பொருள்களில், அந்நிறுவன வலையகங்களில் அச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனமான பாஷா இந்தியாவின் வலையகத்தில் கலைச்சொல்லாக்கம் தொடர்பான இவருடைய பேட்டி வெளியாகியுள்ளது.