
எம்.எஸ்சி. (கணிதம்) எம்.ஏ. (தமிழ்இலக்கியம்) எம்.எல். (தொழிலாளர்சட்டம்) எம்.பி.ஏ. (மனிதவளமேலாண்மை) எம்.சி.ஏ. [முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாடு]
அவருடைய கல்வித் தகுதி:
மதுரைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.ஃபில். (தொழிலாளர் மேலாண்மை) படித்து, எழுத்துத் தேர்வுகள் தேறிய போதும் ஆய்வுக் கட்டுரை (Thesis) சமர்ப்பிக்க முடியாமல் போனதால் பட்டம் பெறவில்லை.
எம்.எஸ்சி. கணிதம் படித்த பிறகு தொலைதொடர்புத் துறையில் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும், தமிழ் எம்.ஏ. படிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் கனன்று கொண்டேதான் இருந்தது. 1979-இல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி அறிமுகப்படுத்திய புதிதில் அதில் சேர்ந்து பயின்றார். கல்லூரியில் படிப்பவர்க்கும், அஞ்சல்வழி படிப்பவர்க்கும் பாடத்திட்டமும், தேர்வும் ஒன்றேதான். இறுதித் தேர்வில் பல்கலைக் கழகத்திலேயே ஐந்தாம் ரேங்க் எடுத்தார்.
சென்னை சட்டக் கல்லூரியில் மாலைக் கல்லூரி வகுப்புகள் நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டுப் பிறகு தொடங்கியபோது அதில் சேர்ந்தார். அவருக்கு இடம் கிடைக்க பி.எஸ்சி., எம்.எஸ்சி. மதிப்பெண்கள் கைகொடுத்தன. பி.எல். தேர்வுகள் அனைத்தையும் தமிழிலேயே எழுதினார். பாடப் புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். வகுப்புகளும் ஆங்கிலத்திலேயே நடக்கும். அப்போதெல்லாம் தமிழில் சட்டப் புத்தகங்கள் அதிகம் இல்லை. தேர்வுகளில் கலைச்சொற்களை அவரே தமிழாக்கம் செய்து எழுதினார். அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களைத் தருவார். பி.எல்.தேர்வில் முதல் மாணவனாகத் தேறினார். தமிழில் தேர்வெழுதி முதல் ரேங்க் எடுத்தது சாதனையாகக் கருதப்பட்டது.
அடுத்த ஆண்டே சென்னைச் சட்டக் கல்லூரியில் எம்.எல். படிப்புக்கு விண்ணப்பித்தார். ஒரு பிரிவில் இடம் கிடைப்பதே அரிதாக இருந்த காலத்தில் அவருக்கு விண்ணப்பித்த மூன்று பிரிவுகளிலும் இடம் கிடைத்தது. அவர் தொழிலாளர் சட்டம் தேர்ந்தெடுத்துப் படித்தார். அவரோடு எம்.எல். சேர்ந்தவர்களுள் அவர் மட்டுமே படித்து முடித்துப் பட்டம் வாங்கியவர் ஆவார்.
அக்காலத்தில் எம்.பி.ஏ. படிப்பு மிகப்பெரிய படிப்பாகக் கருதப்பட்டது. அப்போது, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகம் மட்டுமே, தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ. படிப்பை நல்கியது. அவரும் அவருடைய நண்பர்களும் அதில் சேர்ந்தனர். இரண்டு சதவீத மாணவர்களே படித்து முடித்துப் பட்டம் பெறுவார்கள்.
பாடங்களும், பயிற்சித்தாள்களும், தேர்வுகளும் அவ்வளவு கடினமாக இருக்கும். எந்தத் தாளிலும் தோல்வி அடையாமல் அவர் முதல்வகுப்பில் தேறினார். இறுதி செமஸ்டரில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட, தமிழுக்கான ‘ஆப்டிக்கல் கேரக்டர் ரெகக்னிஷன்’ தொடர்பான அவரது பிராஜெக்ட் மிகுந்த பாராட்டுகளையும் மதிப்பெண்களையும் பெற்றுத் தந்தது.
கணிப்பொறியில் ஒரு சான்றிதழ் படிப்புக்கூடப் படித்ததில்லை என்றாலும் களப்புலமை காரணமாகவே கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தமிழ் கம்ப்யூட்டரில் எழுதிய கணிப்பொறிப் பாடங்களின் தரங்கருதியே, பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.சி.ஏ. மாணவர்களுக்குப் பாடம் நடத்த அழைக்கப்பட்டார். 2000-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் +1 கணிப்பொறியியல் பாடப் புத்தகம் எழுதும் வாய்ப்பும் வந்தது. ஆனால், கணிப்பொறியியலில் அவர் முறைப்படியான பட்டம் எதுவும் பெற்றவில்லை என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு கைநழுவிப் போனது. எனவே கணிப்பொறியியலில் பட்டம் பெற முடிவெடுத்தார்.
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்தார். காலையில் பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.சி.ஏ. மாணவர்களுக்கு ஆசிரியராகப் பாடம் நடத்துவார். பிற்பகல் இந்திரா காந்தி பல்கலைக் கழக எம்.சி.ஏ. வகுப்பில் மாணவனாக அமர்ந்து அதே பாடத்தைக் கேட்பார். வரலாற்றில் இதுபோல எவருமே ஒரே நேரத்தில் ஒரே பட்டப் படிப்பில் ஆசிரியராகவும், மாணவராகவும் இருந்திருக்க முடியாது என அவருடைய நண்பர்கள் கூறுவார்கள். எம்.சி.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் தேறினார்.
அதன்பின் தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகம் எழுதும் வாய்ப்பு மீண்டும் வந்தது. பாடத்திட்டக் குழுவிலும் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பும் கிடைத்தது.