
இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையில் (தற்போது பி.எஸ்.என்.எல்.) 1974 ஜூன் முதல் 2007 மே வரையில், இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி, உதவி இயக்குநர், கணிப்பொறி விரிவுரையாளர், பொறியியல் அதிகாரி, துணக்கோட்டப் பொறியாளர், முதுநிலைத் துணைக்கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் 33 ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு (முழுப் பணிக்காலமும் சென்னை நகரிலேயே) 2007 மே 20-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
பணி அனுபவம்
இந்திய அரசின் தொலைதொடர்புத் துறையில் (தற்போது பி.எஸ்.என்.எல்.) 1974 ஜூன் முதல் 2007 மே வரையில், இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி, உதவி இயக்குநர், கணிப்பொறி விரிவுரையாளர், பொறியியல் அதிகாரி, துணக்கோட்டப் பொறியாளர், முதுநிலைத் துணைக்கோட்டப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் 33 ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு (முழுப் பணிக்காலமும் சென்னை நகரிலேயே) 2007 மே 20-இல் விருப்ப ஓய்வு பெற்றார்.
இவர் எம்.எஸ்சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய தொலைதொடர்புத் துறையில் இளநிலைப் பொறியாளர் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு, பரிந்துரை எதுவும் இல்லாமல் பி.எஸ்சியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இந்த வேலை கிடைத்தது. அரையாண்டுத் தேர்வின்போதே பணிக்கான பயிற்சியில் சேர ஆணை வந்தது. ஆனாலும் அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க, படிப்பு முடிந்து தேர்வு எழுதிய பிறகு பயிற்சியில் சேர அனுமதி கிடைத்தது.
1974 ஜூன் 10-ஆம் நாள் பெங்களூர் பயிற்சியகத்தில் பயிற்சியில் சேர்ந்தார்.
எட்டு மாத காலக் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, திருச்சிக் கோ-ஆக்சியல் நிலையத்தில் ஒரு மாத காலக் களப் பயிற்சிக்குப் பிறகு, 1975 மார்ச்சு 10-ஆம் தேதி சென்னைத் தலைமைத் தொலை தொடர்பகத்தில் (பாரிமுனை, பூக்கடை) பணியில் சேர்ந்தார்.
அவர் படித்த சிவகாசிக் கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் ஆதித்தனார் கல்லூரியிலும் கணித விரிவுரையாளர் பதவி தேடி வந்த போதும் அவற்றை வேண்டாம் என மறுத்து, தொலைதொடர்புத் துறைப் பணியிலேயே தொடர்ந்தார்.
ஒரே அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளர், இளநிலைத் தொலைதொடர்பு அதிகாரி ஆகிய பதவிகளில் தொடர்ந்து பதினெட்டரை ஆண்டுகள் பணியாற்றினார்.
இடையில் இரண்டு மாத காலம் பாண்டிச்சேரியில் நுண்ணலை நிலையத்தில் தற்காலிகத் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்தார்.
1993 அக்டோபர் 21-இல் பதவி உயர்வு பெற்றுத் தமிழ்நாடு வட்டத் தொலைதொடர்புத் தலைமையகத்தில் (சென்னை அண்ணாசாலை) மேலாண்மைத் தகவல் அமைப்புப் பிரிவில் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார்.
இரண்டு ஆண்டு காலம் அப்பதவியில் இருந்தபோது பணிநிமித்தமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்திருக்கிறார்.
1996 ஜனவரியில் கணிப்பொறி விரிவுரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டலத் தொலைதொடர்புப் பயிற்சி மையத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
இந்தியா முழுவதிலுமிருந்து வருகின்ற தொலைதொடர்புப் பணியாளர்களுக்குக் கணிப்பொறிப் பயிற்சி அளிக்கும் பணியில் ஏழாண்டு காலம் சேவை புரிந்தார். கோடை விடுமுறையில் பயிற்சியகத்தில், அவர் துறை ஊழியர்களின் பிள்ளைகளுக்கு (பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவர்கள்) கணிப்பொறிப் பாடம் கற்றுத் தந்துள்ளார்.
மாலை நேரங்களில், சனி, ஞாயிறுகளில் அவர் துறையின் தலைமைப் பொது மேலாளர் உட்பட உயர் அதிகாரிகளுக்குக் கணிப்பொறிப் பயன்பாடுகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
‘மிகச் சிறப்பாகக் கணிப்பொறி கற்றுத்தரும் ஆசிரியர்’ என ஊழியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் ஆகிய அனைத்துத் தரப்பாரின் ஒருமித்த பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
2003 ஜனவரியில் வடக்குப் பிரிவு மேலாளர் அலுவலத்தில் பொறியியல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நுங்கம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த அகல்கற்றைச் சேவைப் பிரிவில் துணைக்கோட்டப் பொறியாளராகச் சேர்ந்தார்.
சென்னையில் பி.எஸ்.என்.எல்லின் அகல்கற்றைச் சேவையை அறிமுகப்படுத்தியதில் இவருக்கும் பங்குண்டு.
2006 ஜனவரியில் தற்காலிகப் பதவி உயர்வு பெற்று, கேகேநகர் தகவல் தொழிநுட்ப மையத்தில் கோட்டப் பொறியாளராகச் சேர்ந்தார்.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, 33 ஆண்டு கால நீண்ட சேவைக்குப்பின், 2007 மே 20-ஆம் நாள் விருப்ப ஓய்வு பெற்றார்.